கோவை புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதன் நகலை எரித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

தேசிய கல்விக் கொள்கை கடந்த 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர், கடந்த 1992ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு,  தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

‘புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு கடந்த  2014ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ  முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது. பல ஆண்டுகளுக்கு பின், அந்த குழு அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. 

மத்திய அரசிடம் ஒப்படைத்த புதிய வரைவு  கொள்கையை, புதிதாக பொறுப்பேற்ற மத்திய  மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். இத்ட்டம் குறித்து இம்மாதம் 30ம் தேதி வரை மக்கள்  தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை  தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை, தமிழகத்துக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மாநிலம் முழுவதும்பல பகுதிகளில், பல்வேறு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் வரைவு நகலை எரிக்கக்கூடிய ஒரு முயற்சியில் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே காலை 11.30 மணியளவில், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

அங்கு, இந்த புதிய வரைவு கொள்கை என்பது ஒருபோதும் தமிழகத்துக்கு தேவையில்லை. இதனால் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போதுள்ள 2 மொழி கொள்கையே போதுமானது என அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.