தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் நின்றுபோன பணிகள், தாமதமான பணிகள், ஒப்பந்தம் தாமதம் காரணமாக 1500 கோடி பணம் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் அந்த பணிகளை ேமற்கொள்ளவும், இந்த நிதியாண்டில் டெண்டர்களை நிறைவேற்ற பணம் இல்லாத காரணத்தால் தமிழகம் முழுவதும் அரசு கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், அணை, ஏரிகள் புனரமைத்தல், செயற்கை அணைகட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டப் பணிகளுக்கு பொதுப்பணித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த திட்ட பணிகளை முடித்து இருக்க வேண்டும். இல்லையெனில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் நீர்வளநிலவள திட்டம், குடிமராமத்து திட்டம், அணைகள் புனரமைப்பு, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்கள், சுற்றுச்சுவர், பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், டெண்டர் விட்டு பணிகளை தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மார்ச் 31ம் தேதிக்குள் அந்த நிதியை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அந்த நிதி அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக, ரூ.1,500 கோடி மதிப்பிலான நிதி வரை அரசிடம் பொதுப்பணித்துறை சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது நடந்து வரும் பணிகளுக்கு பில் தொகை செட்டில் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி இல்லாததால் டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர்கள் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அப்போது, தற்போது டெண்டர் விடப்பட்டு நடந்து வரும் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படாததால், பணிகள் பாதியில் உள்ளது. மேலும், பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விட வேண்டியுள்ளதால் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடந்து வரும் பணிகளுக்கு பில் தொகை செட்டில் செய்யப்படாத நிலையில், தற்காலிகமாக தமிழகத்தில் பல இடங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.