சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரில் இன்று காலை இன்னோவா கார் ஒன்று சாலையில் தறிகெட்டு வந்து கொண்டிருந்தது. திடீரென மின் கம்பத்தின் மீது அந்தக் கார் மோதியுள்ளது. இதைக் கண்டு பதறிப் போன சரோஜா என்ற மூதாட்டி அருகில் சென்று பார்க்க சென்றுள்ளார். உடனே ரிவர்சில் வந்த கார், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரோஜா உயிரிழந்தார். 

இதை அடுத்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆதிலட்சுமி, மோகன கோபால் ஆகியோர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மோகன கோபால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆதிலட்சுமிக்கு கால் முறிந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விபத்து ஏற்படுத்திய காரை அப்பகுதி மக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சில நபர்கள் தப்பித்து சென்றனர். ஆனால் குடிபோதையில் இருந்த ஓட்டுநரைப் பிடித்து மக்கள் தர்டி அடிகொடுத்தனர். பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன், மண்ணடியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.