இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் பரவுதலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு மே 17ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனினும் அதன்பிறகும் ஊரடங்கு நடைமுறைகள் மாறுபட்ட வகையில் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி ஊரடங்கு நடைமுறைகளை நீட்டித்தும் கட்டுப்பாட்டுகள் விதித்தும் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே இன்று மீண்டும் மருத்துவ குழுவினர் முதல்வரிடம் பரிந்துரைகள் வழங்கி உள்ளனர்.

அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மருத்துவர் பிரதீப் கவுர் கூறியிருப்பதாவது, அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என யாரும் அச்சப்பட வேண்டாம். விரைவாக தொற்று கண்டறியப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைக்கலாம். கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பணிக்கு வர அனுமதிக்கக்கூடாது. மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒரு போதும் மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை குறைக்க கூடாது. பரிசோதனைகளால் தான் நோய் தொற்றின் அளவு குறித்து அறிய முடியும். கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது. ஒரே நேரத்தில் ஊரடங்கை முழுமையான தளர்த்தினால் தொற்று அதிகரிக்கும். ஆகையால், படிப்படியாகத்தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.