கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற வந்த ஒரு நோயாளி, திடீரென இறந்தார். இதனால், அவரது உறவினர்கள், அங்கிருந்த பயிற்சி டாக்டரை சரமாரியாக தாக்கினர். இதை கண்டித்து மேற்குவங்கம் மாநிலத்தில் டாக்டகள் போராட்டம் வெடித்தது. பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையில், பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், இந்திய மருத்துவ சங்கம் இன்று 24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று இன்று நாடு முழுவதும், தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்தது. தமிழகத்திலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டன. 

சென்னை, மதுரை, திருச்சி, கோவை,  புதுச்சேரி, திருவள்ளூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் புற மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனை களின் நுழைவு வாயில் முன்பு டாக்டர்கள் ஹெல்மெட அணிந்தும், கருப்புப் பட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்களின் போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என கூறினார். 

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், டாக்டர்களின் போராட்டத்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.