தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கும் மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம் என பொறுப்பற்ற முறையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து உளறல் பேச்சுகளால் அவ்வப்போது பொதுமக்களை சிரிப்பில் ஆழ்த்தி வருகின்றனர். கடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக கூட்டணிக் கட்சியான, பா.ம.க., வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுக்கேட்டவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதேபோல வேட்பாளர் ஜோதிமுத்துவையே, சோலை முத்து என்று மாற்றிக்கூறி சர்ச்சையில் சிக்கியவர். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது, கொலைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் பணத்துக்காக, நகைக்காக இப்படி கொலை, கொள்ளைகள் நடக்குது. இது எல்லா இடங்களிலும்தான் நடக்குது. எந்த ஆட்சி வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் நடப்பதாகவும் கூறினார். இந்த குற்றங்களுக்கும், ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கும் நல்ல அறிவுரைகள் கூறப்படுவதாகவும், இதனை ஏற்று, அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 

மேலும், கர்நாடகவில் பா.ஜ.க. பின்பலத்தில்தான் ஆட்சி கவிழ்ந்ததா என்று தமக்கு தெரியாது. வேலூரில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன, அங்கு அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் எனவும் கூறினார். அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.