ராணுவத்தின் கவுரவ ெலப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் ரோந்து செல்கிறார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கடந்த 2011ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை.

இதையடுத்து, அவர் ராணுவத்தில் களப் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, காஷ்மீரின் 106வது பிராந்திய ராணுவ படைப்பிரிவில் வரும் 31ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவர் களப் பணியாற்றுகிறார்.

அப்போது அவர், ராணுவ வீரர்களுடன் இணைந்து காஷ்மீர் சமவெளிப் பகுதியில் ராணுவ உடையணிந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவார். இதுதவிர பாதுகாப்பு பணி மற்றும் ராணுவ நிலைகளில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவார். ராணுவ தலைமை அலுவலகம் அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, ராணுவ வீரர்களுடன் டோனி 2 வாரம் தங்கி இந்த பணியில் ஈடுபடுவார் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகே நொய்டாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அம்ராபாலி கட்டுமான நிறுவனத்தின் விளம்பர தூதுவராக டோனி பணியாற்றினார். இதற்கான சம்பளத்தை தரவில்லை எனவும், தனக்கு வீடு கட்டித் தருவதாக கூறி தன்னிடம் பெற்ற பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் அந்த நிறுவனத்தின் மீது டோனி புகார் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல், பொதுமக்கள் ஏராளமானோர் அம்ராபாலி நிறுவனம் தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வீடு கட்டிதராமல் ஏமாற்றி விற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய ஆடிட்டர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அந்த குழுவினர் நடத்திய ஆய்வில், அம்ராபாலி நிறுவனத்தின் துணை நிறுவனங்களும் மிகப்பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘அம்ராபாலி மகி’ என்ற நிறுவனத்தின் இயக்குனராக டோனியின் மனைவி ஷாக்‌ஷி உள்ளார். எனவே, அவரிடமும் மோசடி குறித்து விசாரணை நடத்த வாய்ப்புகள் உள்ளதால் டோனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.