பரிசுப் பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அதிரடியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். 

முன்னதாக மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தென்னரசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் காவல்துறையில் நேரடியாக எஸ்.ஐ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். சிறப்பான பணிக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். எனக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தனிப்பட்ட பிரச்சனைக்காக என் மீதுள்ள வழக்கை காரணம் காட்டி, எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு கடந்த 18.8.2014-ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார். 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் போன்ற பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவரின் பணிப்பதிவேடுகள் மற்றும் நன்னடத்தையை ஆய்வு செய்வது அவசியம். மேலும், காவல்துறையில் பரிசுப்பொருட்கள், பூங்கொத்துகள் வழங்குவது தற்போது அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழக டிஜிபி 6 வாரத்திற்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், என உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், காவல்துறையினருக்கு அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், டிஜிபியின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெறக் கூடிய பரிசுப் பொருளின் விலையானது 200 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சனை பெறக் கூடாது, தொழில் பங்குதாரராக இருக்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளையும் டிஜிபி பிறப்பித்துள்ளார். இதை மீறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.