இளம்பச்சை நிற பட்டு உடுத்திய அத்திவரதரை நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்கின்றனர்.

மேலும், பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 23 நாட்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

தினமும் ஒரு வண்ணத்தில் பட்டு உடுத்தி அருள்பாலிக்கும் அத்திவரதர் நேற்று பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவரை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.

அத்தி வரதர் வைபவத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள் உள்பட ஏராளமானோர் தரிசனம் செய்கின்றனர்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் நேரில் வந்து கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இதையொட்டி, பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

கோயிலின் மேற்கு கோபுரம் பகுதிக்கு வந்த லதா ரஜினிகாந்த் குடும்பத்தினர், விஐபி தரிசன பாதை வழியாக அத்திவரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.