மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றித் தமிழகத்திலும் மே 17 வரை ஊரடங்கைத் நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதில், எவற்றிற்கு எல்லாம் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஒரு வாரமாக சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என்பதால் கட்டாயத்தின் பேரில் மே 3க்கு பிறகு 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது மத்திய அரசு. 

ஊரடங்கை செயல்படுத்துவதற்கும், கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலத்திலும், பாதிப்பு குறைவாகவோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்ட மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. 

அந்தவகையில், இந்த மண்டல வாரியாக பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் எந்தெந்த துறை பணிகளுக்கு ஊரடங்கு தளர்வு வழங்கலாம் என்பது குறித்து தமிழக அமைச்சரவை கூடி ஆலோசிக்கப்பட்டது. அதில், சில தளர்வுகளும் மற்றும் தடை நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

தடை உத்தரவு நீட்டிப்பு முழு விவரம்;-

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி   நிறுவனங்களும் திறக்க தடை நீட்டிப்பு.

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

* திரையரங்குள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அங்காட்சியங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள். பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

* பொது மக்களுக்கான விமானம், ரயில், பொது பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

* டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றிற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

* மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து  போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

* தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்

* இறுதி ஊர்வலகங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது. 

* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.