தலைநகரான சென்னை, தண்ணீர் இல்லாத நரகமாக மாறிவருகிறது. நாளுக்‍கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், நீர் மேலாண்மைக்‍கு எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என தமிழக அரசுக்‍கு உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்‍கு பின்னர் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில், பல்வேறு தங்கும் விடுதிகளும்,ஹோட்டல், தண்ணீர் பிரச்னையால் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில்,  நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என  அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது சென்னை உயர் நீதிமன்றம்.

வேலூரில், கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மழை நீர், வீணாக கடலில் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன செஞ்சீங்க? நீர் வற்றுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வால் என்ன தான் பலன்? என்று அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடித்து. 

நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அரசாணைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்‍கு உத்தரவிட்ட நீதிபதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.