கொரோனாவின் பரவல் அதிகரிப்பதை தடுக்க கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசியாவில் மிகப்பெரிய வணிக வளாகமான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ கடைகள் என 3,200க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளது. இந்த கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கோனார் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மேலும், தினசரி  50,000க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், மக்கள் என வந்து செல்லும் இடமாக இருந்து வருகின்றது. 

கொரோனா ஊரடங்கின்போது சரியான முறையை அரசு கையாளாத காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்ற கோயம்பேடு மார்க்கெட் தற்போது கொரோனா பரப்பிய மார்க்கெட்டாக  மாறிவிட்டது. எனவே, தொற்று பரவலை கட்டுப்படுத்த இங்கிருந்த சில்லறை விற்பனை, மலர், கனி கடைகள் மூடப்பட்டது. அந்த கடைகள் மாதவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட் அருகே சலூன் கடை நடத்தி வந்த நபர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், கடைக்கு வந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கும் கடந்த வாரம் தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து கோயம்பேடு பழ வியாபாரி, அவருடடைய மகன், சுமை தூக்கும் தொழிலாளி உட்பட 4 கூலி தொழிலாளர்களுக்கு மற்றும் அங்கு பணியாற்றிய போலீஸ்காரர் உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு சென்ற வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மூலம் பல மாவட்டங்களில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை எதிர்பாராத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்ணகாணிப்பில் இருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை திருமழிசைக்கு மாற்றவும் முடிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.