சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனால், இந்தியா 3 கட்டத்தை அடைந்துவிட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சற்று அடைக்கி வாசித்து வந்த கொரோனா தற்போது ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 37ஆகஅதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க.நகரில் 412 , ராயபுரத்தில் 375 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை வடபழனியில் காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சவுகார்பேட்டையில் 4, விருகம்பாக்கத்தில் 5, மீனம்பாக்கம், அம்பேத்கர் தெருவில் புதிதாக 3 பேருக்கும், சென்னை பூக்கடை காவல் துறை உதவி ஆணையருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. சின்மயா நகர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.