தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பொன்னையன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தின் நிலைமை சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. 100 பேர் சோதனைக்குச் சென்றால் அவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

மேலும், காற்று மாசு காரணமாக கொரோனா பரவாது என்று தெரிவித்த அவர் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு மாசின் காரணமாக பிரச்சினை ஏற்படலாம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் நிலைக்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டார்.