ஐஐடியை தொடர்ந்து  அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னைஐஐடியில் விடுதியில் தங்கி படித்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 419 பேருக்கு நடந்த சோதனையில் 104 பேருக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து நேற்று 514 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 79 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் மீண்டும் 141 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு பாதிப்பு இருப்பது இன்று தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்கள் எண்ணிக்கை 191ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதனையடுத்து,  ஐஐடி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னை ஐஐடியில் உள்ள அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.