தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,40,943-ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று 5, 088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,40,943 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5,718 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,86,454 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 15வது நாளாக 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மட்டும் 1,295 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை உள்ளது.