இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரு நாட்களாக தினமும் 700ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி 2,134 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த செங்கல்பட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த 52 வயது நபர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் காவல்துறையினர் மூலம் அவரை தேடி கண்டுபிடித்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சையில் இருந்து வந்த முதியவர் இன்று அதிகாலை மரணமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது வரை 391பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.