இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பது நல்ல சமிக்ஞை. நேற்று முன் தினம் வெறும் 31 பேருக்கும் நேற்று வெறும் 38 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், இன்று வெறும் 25 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசின் தீவிரமான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக தெரிவித்தார். நேற்று மாலைக்கு பின்னர் இன்று மதியம் வரை செய்யப்பட்ட பரிசோதனையில்  25 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருப்பதாக தெரிவித்தார்.எனவே பாதிப்பு எண்ணிக்கை 1267ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 180 பேர் குணமடைந்துள்ளனர். ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்துவந்த பாதிப்பு  எண்ணிக்க, கடந்த 3 நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. இவ்வளவுக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. கடந்த 3 நாட்களில் 5000ஐக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 3 நாட்களில் வெறும் 94 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருக்கிறது. எனவே கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.