தமிழ்நாட்டில் இன்று 104 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2162ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு நிகராக குணமடைவோரின் எண்ணிக்கையும் உள்ளது ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக எகிறி கொண்டிருக்கிறது. 

சென்னையில் மட்டும் 768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களை காக்க களப்பணியாற்றிய 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா சிகிச்சை பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறையினரும் தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 

மக்களையும் நாட்டையும் கொரோனாவிலிருந்து காக்க, தன்னலமில்லாமல் களப்பணியாற்றும் முன்கள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று பரவுவது தடுக்க முடியாததாகிறது. 

அந்தவகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர், தூய்மை பணியாளர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று உள்ளது. 

இந்நிலையில், இன்று சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ராயபுரம், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
 
எனவே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 771ஆக அதிகரித்துள்ளது.