தமிழ்நாட்டில் தற்போதைய கொரோனா பாதிப்பில் பாதி எண்ணிக்கையை எட்டுவதற்கு, கொரோனா கணக்கை தொடங்கியதிலிருந்து ஒரு மாதம் ஆனது. ஆனால் அந்த எண்ணிக்கை வெறும் 10 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 1755ஆகவும் 25ம் தேதி 1821ஆகவும் இருந்தது. ஏப்ரல் 25ம் தேதி 66 பேரும், 26ம் தேதி 64 பேரும், 27ம் தேதி 52 பேரும், 28ம் தேதி 121 பேரும், 29ம் தேதி 104 பேரும், 30ம் தேதி 161 பேரும், மே ஒன்றாம் தேதி 203 பேரும், 2ம் தேதி 231 பேரும், 3ம் தேதி 266 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 4ம் தேதியான இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

எனவே தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3550ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்கு பிறகு சென்னையில் மட்டுமே அதிகமான பாதிப்புகள் உறுதியாகின. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களில் கடலூரில் 129 பேருக்கும் விழுப்புரத்தில் 76 பேருக்கும் சென்னையில் 69 பேருக்கும், அரியலூரில் 48 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மற்ற மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக பாதிப்பு எகிறியுள்ளது.

கோயம்பேடு மூலமாக மற்ற மாவட்டங்களுக்கும் கொரோன பரவியதன் விளைவாகத்தான் இன்று அதிகபட்சமாக 527 கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 24ம் தேதியிலிருந்த 1755 என்ற பாதிப்பு எண்ணிக்கை வெறும் பத்தே நாளில் இரட்டிப்பாகியுள்ளது. கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் பாதிப்பு கடந்த 2-3 நாட்களாக அதிகரித்தாலும், அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் அதிகமான கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிய முடிந்தது. 

கடந்த 2 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டாலும் இன்றைக்கு அதிகபட்சமாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பும் கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதும், சென்னையில் சமூக பரவல் தொடங்கியதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததுமே விரைவில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக காரணம்.