எந்த விதிகளின் அடிப்படையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கு முன் தகரம் அடிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், அவர்கள் வசிக்கும் தெருக்களில் இருந்து யாரும் வெளியே செல்லாத வகையில், தகரம் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால் பொருட்கள் வாங்குவதற்குக் கூட வெளியே செல்ல முடியாத சூழல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய கணவருக்கு அறிகுறியே இல்லாத கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் தங்களிடம் ஒப்புதல் கூட கேட்காமல் தன்னுடைய கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வலுக்கட்டாயமாக கொரோனா மையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர், தன் வீட்டை தகரம் வைத்து அடைத்தனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், விதிகளின்படி அறிகுறி இல்லாத அல்லது குறைந்த அளவு அறிகுறிகளைக் கொண்ட கொரோனா பாதிப்பாளர்களை சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்ற அவர், விரும்பினால் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்யநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளை தகரம் கொண்டு அடைப்பதற்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ”எந்த விதிகளின் அடிப்படையில் இவ்வாறு தகரம் வைத்து தடுக்கப்படுகிறது” எனக் கேட்டனர்.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மாநகராட்சி அதிகாரிகள் யாருமே வந்து கவனிக்கவில்லை என நீதிபதி சத்யநாராயணா குற்றம்சாட்டினார். மேலும், இந்த மனுவுக்கு அக்டோபர் 19ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.