பெட்ரோல், டீசல் எரிவாயு பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து தற்போது மானியம் மற்றும் மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் (ஐ.ஓ.சி.) நிறுவனம் “இண்டேன்” சமையல் கியாஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மக்களவை தேர்தலையொட்டு தொடர்ந்து கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குறைந்து வந்த நிலையில், இன்று மானியம் விலை சமையல் எரிவாயு சிலிண்டர் 28 காசும், மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.712-ஆகவும், சென்னையில் ரூ. 728-ஆகவும், கொல்கத்தாவில் அதிகப்பட்சமாக ரூ.738-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.  

மானியத்தில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரை பொறுத்த வரை சிலிண்டருக்கு 28 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் ரூ.496.14-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.499.29-ஆகவும், சென்னையில் ரூ.484.02-ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.