அத்திவரதர் வைபவத்துக்கு வரும் விஐபிகள் தரிசனத்துக்கு, மாவட்ட நிர்வாகம் திடீர் கட்டுபாடு விதித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங், வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் வரும் 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 26 நாட்களில் 34 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். தினமும் ஒரு வண்ணத்தில் பட்டு உடுத்தி காட்சியளிக்கும் அத்திவரதர் நேற்று இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டு உடுத்தி, பாதாம், ஏலக்காய், வெட்டிவேர் மற்றும் பஞ்சவர்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு முத்து கிரீடம் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அத்திவரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபம் வண்ண மலர்கள், கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று அமைச்சர் தங்கமணி, நடிகை லதா, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காலை சுமார் 11 மணியளவில் கிழக்கு கோபுரம் பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்ச் செல்ல முயன்றனர். இதனால், போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பக்தர்கள் 3 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த போலீசார், அவர்களை மீட்டு மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார், பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நெரிசலை சரிசெய்தனர்.

இந்நிலையில், அத்திவரதர் வைபவத்தில் பொதுதரிசனம், விஐபி தரிசனம், சகஸ்ரநாம அர்ச்சனை என 3 தரிசன முறை இருந்தது. சகஸ்ரநாம அர்ச்சனையில் ஒரு நாளில் 500 பேர் மட்டுமே தரிசனம் செய்யமுடியும். இதனால், இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைதொடர்ந்து தினமும் 500 பேர் ₹300 ஆன்லைனில் செலுத்தி சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு தரிசனம் மாலை 6 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதால் உபயதாரர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான விஐபி தரிசனம் மாலை 5 மணியுடன் முடிவடைவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.