Minjur saleem: சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி! மீஞ்சூர் சலீம் கைது! கொதிக்கும் அண்ணாமலை!
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகளை மீஞ்சூர் சலீம் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், வெளி நாட்டிலிருந்து நாடு திரும்பிய மீஞ்சூர் சலீம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த சகோதரர் மீஞ்சூர் சலீம் அவர்களை, பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் தரங்கெட்ட திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், கட்சிப் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக, சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிப்பவர்களை மட்டும், வெளிமாநிலங்களுக்குக் கூட, தேடிச் சென்று கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழகக் காவல்துறை, திமுக ஆட்சியில், சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களின் குரலை முடக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது, வருத்தத்திற்குரியதும், காவல்துறையின் மாண்பை களங்கப்படுத்துவதும் ஆகும். காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.