குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அசையும் சொத்துக்கள் பறிமுதல்.. சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
நாட்டிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் மட்டுமல்ல அவர்களின் வீட்டில் உள்ள அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000யும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் ரூ.1000யும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000யும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒருவர் மீண்டும் இதே விதிமீறலுக்கு உள்ளானால் ரூ.5000 அபாரதம் செலுத்த வேண்டும். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் போக்குவரத்து விதி மீறல்கள் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வித்திக்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் மட்டுமே அபராதம் செலுத்தும் நிலையில் பலர் அபராதம் செலுத்துவது இல்லை.
இதனால் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தீர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸார் சிறப்பு முகாம் அமைத்து அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3,376 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.3,49,36,500 வசூலிக்கப்பட்டுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தாத சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.