தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மீண்டும் மூடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த ஊரடங்கு அக்டோபர் மாதம் வரை நீடித்த நிலையில் சில தளர்வுகளுடன் நவம்பர் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா குறைந்ததால் கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதனால், கடந்த 2ம் தேதி இன்ஜினியரிங், மருத்துவம், நர்சிங், கலை அறிவியல் கல்லூரிகள் 9 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ஐஐடியில் கடந்த 2ம் மேதி முதல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு விடுதியில் தங்கியுள்ள 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

அதைத்தொடர்ந்து ஊழியர்களில் 5 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள 559 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில், மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு தொற்று பரவியதால் பெற்றோர், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், கல்லூரிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் கல்லூரிகளை மீண்டும் மூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.