சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒடிசாவை சேர்ந்தவர் ராம் சிங். இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு சோம்நாத் (3) என்ற குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதி, சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். நள்ளிரவு ஆனதால், அவர்கள் 6வது நடைமேடையில் தூங்கிவிட்டனர். அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் சோம்நாத், திடீரென மாயமானான்.

திடீரென கண் விழித்து பார்த்த பெற்றோர், மகன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர், குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

கையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையை தூக்கிச் செல்லும் அந்த நபர் யார் என்று ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில், ரயில்வே போலீசாரின் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திச் செல்லும் நபரின் வீடியோக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.