சென்னையில் மரப்பெட்டியில் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சு விளையாடிய 7 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை திருவான்மியூர் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த திருப்பதி என்பவரது 7 வயது மகள் தானுஸ்ரீ, 5 வயதான மற்றொரு மகள் சாரு ஆகியோர் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளனர். திருப்பதி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவருடைய மனைவி வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார்.

 

 இந்நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டில் கண்ணாமூச்சு விளையாடிக்கொண்டிருந்தனர். தானுஸ்ரீ, சாருவும் வீட்டில் இருந்த பெரிய மரப்பெட்டிக்குள் இறங்கி கதவை மூடி ஒளிந்துகொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக பெட்டியின் தாழ்பால் மூடிக்கொண்டதால் மீண்டும் அவர்களால் கதவை திறந்து கொண்டு வெளியே வர முடியவில்லை. நீண்டநேரமாக அவர்களது தாய் இருவரையும் தேடி வந்துள்ளார். 

இதனையடுத்து பெட்டியில் இருந்து சத்தம் கேட்டதையடுத்து திறந்து பார்த்த போது மகள்கள் இருவரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தானுஸ்ரீ ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் 2-வது மகள் சாரு அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.