சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வாலிபரை போலீசார் கடுமையாக தாக்கியதால் அவமானம் தாங்க முடியாமல் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை செம்மஞ்சேரி லால்பகதூர் சாஸ்திரி தெருவை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (33), எலக்ட்ரீஷியன். இவர், அதே பகுதியில் வசிக்கும் பானுமதியிடம் (45) நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பானுமதி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் நேற்று இரவு 7.30 சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து, அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு,  அவரை போலீசார் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுறது.

இவர், அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலி தாங்கமுடியாமல் சாலைக்கு வந்த சதீஷ் குமார் பிராட்வேயிலிருந்து செம்மஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த மாநகர பேருந்து முன் பாய்ந்துள்ளார். இதில், சதீஷ் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடையார் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் சதீஷ் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.