நிவர் புயல் சூறைக்காற்றால் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் நடந்து சென்ற 50 வயது நபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை  பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல்வேறு பககுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

இந்நிலையில், திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பள்ளி அருகே நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர வேகத்தில் மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதில், மரம் ஒன்று வேரோடு சாலையில் நடந்து சென்ற 50 வயது நபர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

ஆனால், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.