சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டை  50 பேர் கொண்ட  கும்பல் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். ரஃபீகா என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. ஷாநவாஸ் மற்றும் ரஃபீகா இருவருக்குமிடையே வாடகை தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

இந்நிலையில், இரு தரப்பினருக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்த நிலையில் இன்று காலை சூப்பர் மார்க்கெட்டுக்கு சுத்தி, ஸ்பேனர்  உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 50 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் நுழைந்துள்ளது. கடையிலிருந்த ஊழியர்களைத் தாக்கியதுடன் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும், கடையிலிருந்த சாமான்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் ஒருவர் காயம் அடைந்தார். 

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த காவல் துறையினர் கடைக்குள் இருந்த 20 பேரை பிடித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சிலர் டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவினர் என்பது தெரியவந்துள்ளது.