சென்னையில் கடந்த சில வருடங்களாகவே ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ரவுடிகளின் பழைய வழக்குகள் மற்றும் அவர்களது ஜாதகங்களை, போலீசார் பட்டியலாக தயாரித்து வருவதால் ரவுடிகள் பீதி அடைந்துள்ளனர். 

வட சென்னை பகுதிக்கு உட்பட்ட, வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், கொடுங்கையூர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில், 1980-களில், ரவுடிகள் பலர் தலைதுாக்கினர். வெள்ளை ரவி, ஆசைத்தம்பி, கபிலன் உள்ளிட்ட ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள். இவர்களில், முக்கியமாக வெள்ளை ரவி, ஆசைத்தம்பி, கபிலன் போன்ற ரவுடிகள், போலீசாரால், என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கேட் ராஜேந்திரன் உள்ளிட்ட சில ரவுடிகள் முன்விரோதம் காரணமாக எதிர் கோஷ்டியினர் அவர்களை போட்டு தள்ளிவிட்டனர். 

பின், ரவுடி கும்பல்களின் தலைவர்களாக வளர்ந்து வந்த நாகேந்திரன், காக்கா தோப்பு பாலாஜி போன்ற ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்படி இருந்த போதிலும் வட சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதேவேலையில், குற்ற சம்பவங்களும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த மாதம் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி வல்லரசுவை பிடிக்க சென்ற போது போலீஸ்காரர், பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோரை கத்தியால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் நடத்திய அதிரடி என்கவுன்டரில், வல்லரசு உயிரிழந்தார்.

 

இவரது மறைவுக்கு பின்னும், வட சென்னையில், சில ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதையில், கத்தி, அரிவாளுடன், அப்பகுதி மக்களவை அச்சுறுத்தும் வகையில் நடத்து கொள்கின்றனர். இதனால், வல்லரசு போன்று இளம் ரவுடிகளின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, வழக்கு விபரங்கள் அடங்கிய, ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள திரிபாதி இதுபோல பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.