இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஐ எட்டியிருக்கும் நிலையில் 775 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,775 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 22 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தமிழகத்தில் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட இருக்கிறது. அதன்படி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று பெருமாநகராட்சி பகுதிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நெல்லை, தென்காசி, திருவள்ளூர், சென்னையை சுற்றி இருக்கும் நகரங்கள் என பல்வேறு இடங்களிலும் 26ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம புற பகுதிகளில் நோய் தொற்று கட்டுக்குள் இருந்த போதும் மக்கள் நெருக்கமாக வாழும் பெருநகரங்களில் வைரஸ் நோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு இருப்பதால் மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதனிடையே சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை 3 மணி வரை காய்கறி, மளிகை போன்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக வழங்கப்படும் அவசர பாஸ் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கிற்கு உத்தரவு வந்திருக்கும் நிலையில் மக்களுக்கு அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைக்கப்படுதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையை விட்டு அவசரத் தேவைகளுக்காகவும் மக்கள் வெளியேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.