மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், கணபதிநகர், தாமஸ் தெருவைச் சேர்ந்தவர் சிபிராஜ். இவருடைய மனைவி சைலஜா. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (4), ஆதிதேஷ் (2) என இரு குழந்தைகள். 

கோயம்பேட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த சிபிராஜ், உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் கடந்த பிப்ரவரி மாதம் இறந்துவிட்டார். அதன்பின்னர் சைலஜா குழந்தைகளுடன் வசித்து வந்தார். இன்று காலை சுமார் 8 மணியளவில் சிபிராஜின் நண்பர் ஜீனத் கேரளாவில் இருந்து சிபிராஜின் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது வீட்டுக் கதவு உட்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த ஜீனத் கதவை நெம்பித்திறந்து உள்ளே சென்று பார்த்தார். உள்ளே சைலஜா மற்றும் இரு குழந்தைகள் மயங்கிய நிலையில் கிடந்தனர். 

அதிர்ச்சி அடைந்த ஜீனத் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் பரிசோதித்ததில் குழந்தைகள் ஸ்ரீலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோர் ஏற்கனவே இறந்து போயிருப்பது தெரியவந்தது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சைலஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவதிப்பட்ட சைலஜா, குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சிபிராஜின் நண்பர் ஜீனத்திடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.