சென்னை தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் என்பது குறைந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதிகளவில் கூட்டம் சேர்க்கக்கூடாது. உள்ளே வரக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை  தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடையில் விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி அதிக கூட்டம் கூடியதையடுத்து தற்போது அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

குறிப்பாக நேற்று அதிகளவில் வாடிக்கையாளர் குவிந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதனையடுத்து, இன்று காலை கடை திறந்தவுடன் ஊழியர்கள் உள்ளே  சென்று இருக்கிறார்கள். உள்ளே சென்ற ஊழியர்களை வெளியே வருமாறு கூறிவிட்டு கடைக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல விதிகளை மீறும் கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.