கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கொரோனாவை விரைந்து கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, தமிழகத்தில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவரும் 21 மாவட்டங்களில் கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்தும் நோக்கில் குழு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது, தரமான சிகிச்சையளிப்பது என தமிழக அரசு முழுவீச்சில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. மக்கள் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளி ஆகிய இரண்டையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திவருகிறது அரசு. 

அரசு தரப்பில், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மக்கள் இன்னும் அலட்சியமாக இருப்பதை பார்க்கமுடிகிறது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்தவகையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், இன்றே மீன் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர். தனிமனித இடைவெளி என்பதை சற்றும் பின்பற்றாமல், கூட்டம் கூடினர். 

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்கப்படும். அந்தவகையில், எப்படியாவது மீன் வாங்கிவிட வேண்டும் என்பதற்காக சென்னைவாசிகள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், மைக் மூலம் எவ்வளவோ வலியுறுத்தினாலும், மக்கள் அதையெல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. 

சென்னையில் கடந்த 2 வாரமாகத்தான் கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசு கடும் முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கஷ்டப்பட்டு பாதிப்பை கட்டுப்படுத்தும்போது, மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவுக்கு எதிரான போரில் ஜெயிக்க முடியும். அதைவிடுத்து இதுமாதிரி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 

நாளை முழு ஊரடங்கு என்பதால், இன்றே மீன் வாங்குவதற்காக மக்கள் இப்படி கூட்டம் கூடினால், ஊரடங்கு அமல்படுத்துவதன் நோக்கமே அடிபட்டுவிடுகிறது. எனவே மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.