சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு ஒன்றை படைக்க உள்ளது. கிட்டதட்ட 191 நாட்களில் தற்போது வரை ஒரு துளி கூட மழைகூட பெய்யவில்லை.

 

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வறட்சி காரணமாக சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் வெப்பத்தை குறைக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. ஆனால், இதுவரை ஒரு துளி மழைக்கூட பெய்யாத அவல நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது தான் சென்னையில் மழை பெய்தது. 2015-ம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள் சென்னையில் மழை பெய்யாமல் இருந்ததே மோசமான வரலாறாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இறுதியாக மழை பெய்த நாள் தொடங்கி இந்த ஆண்டில் தற்போது வரை சென்னையில் மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கை 191-ஆக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் இதே நிலைமை நீடித்தால், மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரலாற்றை சென்னை மாநகரம் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.