உணவுத் திருவிழாவில் சாதனை! எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

சென்னை உணவுத் திருவிழாவில் சிறப்பாக பங்காற்றிய 180 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,136 மகளிருக்கு 15.71 கோடி ரூபாய் கடன் உதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

Chennai Food Festival! Income of Rs. 1.55 crore tvk

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், நகர்ப்புறத்தில் செயல்படும் 180 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,136 மகளிருக்கு 15.71 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளையும், கடந்த மாதம் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் வெற்றிக்கு செயலாற்றிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 138 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில்: சமையல் என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை திருப்திப்படுத்த சமைப்பதே மிகப் பெரிய விஷயம். ஆனால், இங்கே வந்திருக்கிற மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த சகோதரிகள் நீங்கள், சென்னை உணவுத் திருவிழாவில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேருக்கு, அதாவது கிட்டத்தட்ட ஒரு 1 இலட்சம் குடும்பத்தினருக்கு சமைத்திருக்கின்றீர்கள் உணவுத்திருவிழா நடைபெற்ற அந்த 5 நாட்களிலுமே அவ்வளவு கூட்டம் நின்றிருந்தது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் உணவினை வாங்கி சென்று ருசித்ததை நாங்கள் அனைவரும் கண்கூடாக பார்த்தோம். மெரினாவில் வருகிற கடல் அலையைவிட உணவுத்திருவிழாவுக்கு வருகிற மக்கள் தலையே அதிகமாக இருந்தது என்பதை சென்னை மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.

5 தினங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த உணவுத் திருவிழாவுக்கு சுமார் மூன்றரை லட்சம் பேர் வருகை தந்து மொத்தம் ரூபாய் 1 கோடியே 55 லட்சம் அளவுக்கு உணவுப் பொருட்களை வாங்கி சுவைத்துள்ளனர். பொதுமக்கள் அனைவரின் பாராட்டுதலையும் பெற்று, மிகப் பெரிய அளவில் இந்த உணவுத் திருவிழா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உங்களின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்துள்ள ஒரு வெற்றி, அங்கீகாரமாகும்.

மகளிரை தொழில் முனைவோர் ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்படுகிற நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு, இந்த உணவுத்திருவிழாவின் மூலம், பல்லாயிரக்கணக்கான மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கி உள்ளது. அதற்காக தான் இன்றைக்கு இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில், ஏராளமான திட்டங்களை நம்முடைய  திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்றது.  மகளிரை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில், இந்திய அளவில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் உள்ளது. அதனால் தான் நம்முடைய முதலமைச்சர் மகளிருக்கென்று பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்.

நம்முடைய அரசு பொறுப்பேற்றவுடன், நம்முடைய முதலமைச்சர் அவர்களின் முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயண திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். ஒவ்வொரு மகளிரும் இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் வரைக்கும் சேமிக்கிறார்கள். அதேபோல, பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும், உயர் கல்வி படிக்க வேண்டும் என்று கல்வி ஊக்கத் தொகையாக வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 4 லட்சம் மாணவிகள் வருடந்தோறும் பயன் பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பயனடைந்து வருகிறார்கள். இதற்கெல்லாம், மகுடம் போல, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்துக்கு நம்முடைய அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு இந்தத் திட்டங்களே சாட்சி. இங்கே கூட, நம்முடைய 180 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு ரூபாய் 15 கோடி அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்குகிறோம். இதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளிலும், உணவுத் திருவிழாவை இன்னும் பெரிதாக, அதிக கடைகளோடு, இன்னும் பிரம்மாண்டமாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உங்கள் அனைவரின் வெற்றிப்பயணம் ஒவ்வொரு ஆண்டும் தொடரட்டும் என  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios