சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை கோடை வெயிலை விட, கொரோனா வாட்டி வதைக்கிறது. சென்னை போலீசாருக்கும் சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதனிடையே, நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளையும் கொரோனா மிரட்ட ஆரம்பித்துள்ளது. திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அண்ணாநகர் துணை ஆணையர் நேற்று கொரோனா பாதிப்பில் சிக்கினார். அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  அவரது குடும்பத்தினரும் சோதனை வளையத்தில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. சென்னை காவல்துறையில் கொரோனாவால் பாதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது.