கொரோனா ஊரடங்கால் ஏழை, எளிய மக்களும் தினக்கூலி தொழிலாளர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளையும் சிகிச்சை பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுவரும் அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கான தேவைகளை பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்திவருகிறது. 

அந்தவகையில் ஊரடங்கால் பெரும்பாலானோர் வேலையிழந்து வருமானமற்று தவித்துவரும் நிலையில், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கிவரும் அரசு, மளிகை பொருட்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறது.

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 வழங்கிய அரசு, மளிகை பொருட்களையும் குறைந்த விலையில் வழங்கிவருகிறது. மேலும் அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கிவருகிறது. ஊரடங்கால் காசு இல்லாமல் யாரும் உணவில்லாமல் பட்டினியாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அரசு, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவளித்துவருகிறது. 

சென்னையில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், வெளியூருக்கு திரும்பமுடியாமல் சென்னையில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோர் உணவில்லாமல் தவித்துவிடக்கூடாது என்பதற்காக இலவச உணவு வழங்கப்பட்டுவந்த நிலையில், இன்று அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், ஊரடங்கு காலமான மே 17ம் தேதி வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே சென்னை வாழ் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் அம்மா உணவகங்களில் இதுவரை ஊரடங்கு காலத்தில் சாப்பிட்டதுபோலவே, இனிமேலும் மே 17 வரையிலும் இலவசமாக உணவு உண்ணலாம்.