சென்னையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 20 வயது இளம் பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. கடந்த சில நாட்களே கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 500-ஐ தாண்டிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,882ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், இன்று கொரோனா அறிகுறிகளுடன் இருந்த 20 வயது இளம்பெண் மருத்துவமனையில் திடீரென உயிரிழந்தார். ஆழ்வார் திருநகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு வாரமாக கடும் சளி, காய்ச்சல் இருந்துள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலை பரிதாமாக உயிரிழந்துள்ளார். 

ஆனால், பரிசோதனைகள் முடிவுகள் வந்த பிறகே  இளம்பெண்ணுக்கு கொரோனா இருந்ததா என்பது தெரியவரும். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வந்த நிலையில் இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் சென்னையில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.