மாணவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று சென்னை, அரும்பாக்கம் சிக்கனலில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது கையில் பட்டாக் கத்தியுடன் இருந்த மாணவர் ஒருவர், மற்றொரு மாணவரை சாலையில் விரட்டி விரட்டி வெட்டினார். இதில் அந்த மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பேருந்தில் உள்ளே இருந்த சில மாணவர்களையும் அவர்கள் கத்தியால் வெட்டினர். 

பட்டப்பகலில் அதுவும் அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவரை சக மாணவர்கள் வழிமறித்து கத்தியால் வெட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூயின் முதல்வர் அருள்மொழிச்செல்வன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் இணை ஆணையர் சுதாகர், வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் பாயும். இனி ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், இது தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மாநகர பேருந்தில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தால் பொது மக்கள் உடனடியாக 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். பேருந்து கூரை மீது மாணவர்கள் ஏறினால் பேருந்தை இயக்க வேண்டாம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மோதல்கள் ஏற்படும் வழித்தடங்களில் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும் என காவல் இணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.