சென்னையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை காப்பாற்ற தந்தை கதறிய காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது.

 

சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மகன் சாய் சந்தோஷுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இவர்கள் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் வழியாக சென்றுக்கொண்டிருந்தனர்.

 

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று உரசிச் சென்றதால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த சாய்சந்தோஷ் பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். தந்தை சந்திரசேகர் பாலத்திலேயே கீழே விழுந்தார். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சாய் சந்தோஷ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை பெற்ற மகனை மார்பில் அணைத்து கதறினார். இதனையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.