சரியான திட்டமிடல் இல்லாததால் சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் மூலம் தொற்று பரவியது என்பதை கண்டறிய முடியாததால் இதற்கான தோல்வியை சுகாதாரத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். 

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2,162  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்;-

* சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் ஒருவரும், வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் 2 பேருக்கு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் பேசின் பிரிட்ஜ் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் தங்கியுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும்  அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

* சென்னை அருகே உள்ள மாங்காடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரின் மனைவி, 2 மகள்கள், அவருடன்காவல்துறையினர் உள்ளிட்ட 20 பேருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர். 

* சென்னை ஏழு கிணறு பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

* கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த செங்குன்றம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டில் 3 சக்கர வண்டியை வைத்து லோடு ஏற்றி-இறக்கி வந்த இவர் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் மூலமாக அவரது மகளுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* சென்னை முகப்பேர் கிழக்கு கிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 60 வயது முதியவருக்கு காய்ச்சல், சளி பிரச்சனை இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரது மனைவி பணிபுரிந்து வரும் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று மாலை அவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக முதியவர் சிகிச்சைக்காக ராஜூவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி 2 மகன்கள், மருமகள் ஆகியோரும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 2 மகன்கள், மருமகள்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

* சென்னை ஓட்டேரி ஊர்க்காவல்படை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அயனாவரம் பகுதியில் வசித்து வருகிறார். ஓட்டேரி மற்றும் புளியந்தோப்பு கட்டுப்படுத்துதல் மைய பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் உள்ள 10 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவரது மனைவியையும் தனிமைப்படுத்தி கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் 3-வது காவல் நிலையம் இதுவாகும்.

* கோயம்பேடு  சந்தைக்கு காய்கறி வாங்கச்சென்று வந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தேனாம்பேட்டை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தொடர்புடையவர்களில் இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

* சென்னை அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இதுவரை 3 பேருக்கு கொரோனா கண்றியப்பட்டுள்ளது.  அண்ணாநகர் அடுக்கமாடி குடியிருப்பில் உள்ள காவல் ஆய்வாளர் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மருத்துவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டது.

* சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மகாலட்சுமி நகர் - கணேஷ் நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் சிறுவனை சேலையூர் கேம்ப் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு ரத்த பரிசோதனையில் அவனுக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து, சிறுவன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சிறுவன் சிகிச்சை பெற்றுவந்த சேலையூர் கேம்ப் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் என 23 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

* புதுப்பேட்டை பகுதியில் மாநகராட்சி மருந்தகம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.