சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து இந்த உணவகம் செயல்பட்டு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களையும் காட்டிலும் சென்னையில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.  இதுவரை தமிழகத்தில் 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1,605 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அதிக அளவிலான நோய்தொற்று பரவலுக்கு கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை எடுத்த போதிலும் சங்கிலி தொடர் போலே நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பீய்ச்சி கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், தற்போது சென்னை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே அந்த உணவகம் செயல்பட்டதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் அந்த உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து,  அந்த உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றவர்கள் உடனடியாக தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த அந்த உணவகத்தின் ஊழியர்கள், உணவு வாங்கி சென்றவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையை தொடர்ந்து உணவகத்தால் அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.