தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக தாறுமாறாக எகிறிவருகிறது. கொரோனா தமிழ்நாட்டில் உறுதியான ஆரம்பத்தில் டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. சில நாட்களில் டெல்லி தொடர்புடைய பாதிப்பு முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், தப்லிஹி ஜமாத்தைவிட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் சிங்கிள் சோர்ஸாக கோயம்பேடு மார்க்கெட் உருவாகியுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா உறுதியாவதால், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தான் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களால் பாதிப்பு எகிறுகிறது. 

அந்தவகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கண்காணிப்பு பணிகளை மேற்பார்வையிட்ட சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமிக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று முடிவு வந்தது. கொரோனா தடுப்பு பணிகளிலும் ஊரடங்கை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவும் களத்தில் இறங்கி களப்பணியாற்றும் காவல்துறையினருக்கு தொற்று ஏற்படுவது தொடர் சோகமாக இருந்துவருகிறது. இதுவரை சென்னையில் காவல்துறையினர் 58 பேருக்கு கொரோன உறுதியாகியிருக்கிறது. டிஜிபி அலுவலகத்தில் மட்டுமே 16 பேருக்கு தொற்றுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. 

அந்தவகையில், அந்த லிஸ்ட்டில் காவல்துறை உயரதிகாரியான துணை ஆணையர் முத்துசாமிக்கும் கடந்த 2ம் தேதி தொற்று உறுதியானதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவருக்கு மீண்டும் டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில், முடிவு நெகட்டிவ் என வந்ததால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.