சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்த வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் தமிழகத்தில் நேற்று புதிதாக 447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், மட்டும் 5,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. 

அதேபோல், சென்னையில் விருகம்பாக்கம் நடேசன் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கபட்ட 5 பேரும் கோயம்பேடு சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்த வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 3 காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.