செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு விநாடிக்கு 3,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அதுபோன்று தற்போது நடந்து விடக்கூடாது என்பதால், கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது.

இதனால் இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏரியில் நீர் அளவு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஆகையால், 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் மேலும், 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கூடுதல் நீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மீட்பு மற்றும் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.