நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ள சந்திரயான் 2, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும் உடன் இருந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. 

ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்திரயான்-2 விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது.

 

இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவும் உடன் இருந்தார். இதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2 வெற்றிகரமாக தனது விண்வெளி ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதும் ஜக்கி வாசுதேவ் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.