கழிவுநீர் லாரி ஓட்டுநரை தகாத வார்த்தையால் கொச்சைபடுத்தும் வகையில் பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய வண்டிங்க மொத்தம் 375. இந்த வண்டிங்க அனைத்தும்  திருவான்மியூர் – கேளம்பாக்கம், கானத்தூர் – ஈ.சி.ஆர் சாலை, தாம்பரம், குரோம்பேட்டை  செம்பாக்கம் – துரைப்பாக்கம் என்று இந்த சுற்றுவட்டாரத்தில இருக்க அனைத்து வீடுகள், கடைகள், ஓட்டல், திருமண மண்டபம், தங்கும் விடுதி, என எல்லா இடத்திலும் இருக்கக்கூடிய கழிவுநீரை எடுத்து வருகின்றனர். 


இந்நிலையில், சென்னை பள்ளிகரணை பகுதியில் உள்ள ஐஐடி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நேற்று தனியார் குடியிருப்பில் கழிவு நீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது, தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் எடுக்கும் லாரி ஓட்டுநரான தூய்மைப் பணியாளர் மணிகண்டனை என்பவரை தகாத வார்த்தையால் கொச்சையாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சந்திரசேகர் பேசுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். சாதிய வன்மத்தோடு சந்திரசேகர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், சந்திரசேகர் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. மேலும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இதனிடையே மிகுந்த மனஉளைச்சல் அடைந்த மணிகண்டன் இதுதொடர்பான புகாரை பள்ளிகரணை காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், தகாத வார்த்தையால் கொச்சைபடுத்தும் வகையில் திட்டியது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 294B பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் விரைவில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.